ட்விட்டரில் ஒரு கோடி பின் தொடர்பாளர்களை பெற்ற முதல் தமிழ் சினிமா நடிகர் என்ற பெருமையை நடிகர் தனுஷ் பெற்றுள்ளார்.
தமிழ் சினிமாவின் அறிமுகமாகும் போது, பல்வேறு விமர்சனங்களை பெற்ற தனுஷ், இன்று பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு, பாலிவுட், ஹாலிவுட் என நடித்து அசுர வளர்ச்சியில் சென்று கொண்டிருக் கிறார். ஓவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து, தன்னுடைய அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். எனவே இவர் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.
இவருடைய நடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக சமீபத்தில், 'அசுரன்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். மேலும் அவரது 'கர்ணன்' நல்ல விமர்சனங்களைப் பெற்றது மட்டுமல்லாமல், பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இந்த படத்திலும் தனுஷின் எதார்த்தமான நடிப்புக்கு அடுத்த தேசிய விருது கிடைக்கும் என பல திரைப்பட விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
தன்னுடைய திறமையை நடிப்போடு நிறுத்தி கொள்ளாமல், நடிப்பை தாண்டி, பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர் என பிஸியாகவே வலம் வருகிறார். அதே போல் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் முழு நீள பாத்திரத்தில் நடித்த முதல் தமிழ் நட்சத்திரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் தனுஷ். அவர் தற்போது ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் 'தி கிரே மேன்' படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இந்த படப்பிடிப்பை முடிந்து கொடுத்துவிட்டு, சில தினங்களுக்கு முன் இந்தியா வந்த தனுஷ், கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடித்து வரும் இன்னும் பெயரிடாத படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த படத்தில் முதல் முறையாக தனுஷுக்கு ஜோடியாக 'மாஸ்டர்' பட ஹீரோயின் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். அடுத்தடுத்து, வெற்றிமாறன், செல்வராகவன், மாரி செல்வராஜ், சேகர் காமுல்லா, என முன்னணி இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்க அரை டஜன் படங்கள் இவரது கைவசம் உள்ளது.
தற்போது ட்விட்டரில் ஒரு கோடி பின் தொடர்பாளர்களை பெற்ற முதல் தமிழ் சினிமா நடிகர் என்ற பெருமையை நடிகர் தனுஷ் பெற்றுள்ளார்.
கோலிவுட் திரையுலகை பொறுத்தவரை கமல்ஹாசன் 60 லட்சம், ரஜினி 59 லட்சம், விஜய் 32 லட்சம் பின் தொடர்பாளர்களை வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் தனுஷை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் இதனை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.