மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், அதிகாலை 3 மணிக்கு சென்னை திரும்பினார்.
சிவா இயக்கத்தில் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்த கையோடு, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக, ரஜினிகாந்த் கடந்த ஜூன் மாதம் 19-ஆம் தேதி தனி விமானத்தில் அமெரிக்கா சென்றார்.
அங்கு புகழ்பெற்ற மயோ மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான வழக்கமான பரிசோதனை அவருக்கு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர், மகள் ஐஸ்வர்யாவுடன் சாலையில் நடந்து செல்வது, ரசிகர்களை சந்தித்தது உள்ளிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க பயணத்தை முடித்த ரஜினி தனி விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார்.
அதிகாலை 3 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அவரின் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தலைவா.. தெய்வமே என அவரின் ரசிகர்கள் கோஷமிட்டனர். ரஜினியை நேரில் கண்ட சில ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். ரசிகர்களை கும்பிட்டு வணக்கம் செலுத்தினார். பின்னர் காரில் அவர் புறப்பட்டு சென்றார்.
ரஜினி ரசிகர்களின் வருகையால் சென்னை விமான நிலையம் அதிகாலையிலேயே பரபரப்பாக காணப்பட்டது