எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளின் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் கருத்தில் கொண்டு, மக்கள் அதிகளவில் மின்சார வாகனங்களைத் தேர்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான கிராவ்டான் மோட்டார்ஸ் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்கி உள்ளது. குவாண்டா மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளை கிராவ்டான் மோட்டார்ஸ் 2016 ஆம் ஆண்டு துவங்கியது. தற்போது அந்நிறுவனத்தின் முதல் பேட்டரி எலக்ட்ரிக் பைக்கான குவாண்டாவை அறிமுகம் செய்ய உள்ளது.
புதிய குவாண்டா மாடல் அறிமுக விலை ரூ. 99 ஆயிரம், என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிளின் பிரேம், மோட்டார் கேசிங் மற்றும் பேட்டரி போன்றவை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு உள்ளது. நகரம் மற்றும் கிராமம் என இருதரப்பு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
இந்த புதிய குவாண்டா எலக்ட்ரிக் பைக்கில் 3 kWH லித்தியம் அயன் பேட்டரி உள்ளது.. மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். அதே நேரத்தில் இந்த பைக்கை Eco மோடில் இயக்கினால் 320 கிலோமீட்டர் வரை செல்ல முடியும் எனவும் கிராவ்டான் நிறுவனம் தெரிவித்துள்ளது.