கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 78 டாலர்களை தொட்டுள்ளதால் பெட்ரோல் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கத்தால் கடந்த ஆண்டு உலக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. அதாவது கொரோனாவுக்கு முன்பு வரை சுமார் 66 டாலருக்கு விற்கப்பட்ட கச்சா எண்ணெய் கடந்த ஆண்டு மே மாதம் பேரல் ஒன்றுக்கு 23 டாலர் என்ற அளவுக்கு சரிந்தது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. ஆனால் கச்சா எண்ணெய் இந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்த போதும், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை.
மோடி தலைமையிலான பாஜக அரசு பெட்ரோல், டீசல் மீதான சாலை வரி, கலால் வரி ஆகியவற்றை உயர்த்தியதே இதற்குக் காரணம். சாலை வரி, கலால் வரி என இரண்டு வரிகளும் சேர்த்து, பெட்ரோல் மீது லிட்டருக்கு 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டது. டீசல் லிட்டருக்கு 13 ரூபாய் உயர்த்தப்பட்டு எரிபொருள் வரியாக விதிக்கப்பட்டு வருகிறது.
இதனால் உலகிலேயே பெட்ரோல், டீசல் மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆம். பெட்ரோல், டீசல் மீது அதிகபட்சமாக 69% வரியை இந்தியா விதித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தான் தற்போது பெட்ரோல் டீசல் விலை தற்பொது விண்ணை முட்டியுள்ளது.
அந்த வகையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை ரூ. 100-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 78 டாலர்களை தொட்டது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத உச்சமாகும். பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
ஏற்கனவே பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இது மேலும் அதிகரித்தால், அது பொதுமக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த விலை உயர்வால் மேலும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.