ஜீலை மாதம் முதல் கார்களின் விலையை உயர்த்த மாருதி நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. மூலப்பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால் விற்பனை விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது என, மாருதி சுசூகி நிறுவனம் பங்குச்சந்தைக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறது. ஆனால், எவ்வளவு விலை ஏற்றம் இருக்கும் என்பது அறிவிக்கப்படவில்லை. மாடல்களுக்கு ஏற்ப விலை ஏற்றம் இருக்கும் என தெரிவித்திருக்கிறது.
இந்த ஆண்டில் மாருதி நிறுவனத்தின் கார்கள் நான்காவது முறையாக விலை ஏற்றம் செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் ஒரு முறை விலை ஏற்றம் இருந்தது. அதேபோல ஏப்ரலில் இரு முறை விலை ஏற்றம் நடந்தது. தற்போது நான்காவது முறையாக ஜூலை முதல் கார்களின் விற்பனை விலையை மாருதி நிறுவனம் உயர்த்த இருக்கிறது.
விலை உயர்ந்திருப்பதால் விலை ஏற்றம் தவிர்க்க முடியாததது என மாருதி தெரிவித்திருக்கிறது. ஸ்டீல் விலை கடந்த சில மாதங்களாக கடுமையாக அதிகரித்திருக்கிறது. தவிர, செமி கண்டக்டருக்கான பற்றாக்குறையும் சந்தையில் இருந்து வருவதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆட்டோமொபைல் துறையில் செமி கண்டக்டர் பயன்படுத்துவது சமீபகாலங்களில் மிகவும் உயர்ந்திருக்கிறது. வாகனங்களின் செயல்பாடுகளுக்கு செமி கண்டக்டர்களின் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜனவரி மாதம் அதிகபட்ச விலையேற்றமாக ரூ.34,000 இருந்தது. ஏப்ரலில் சராசரியாக 1.6 சதவீதம் அளவுக்கு விலை ஏற்றம் இருந்தது.