தமிழக மின்சாரத் துறையில் மாற்றங்கள் : நடைமுறைக்கு வரும் புதிய வசதி!
நிருபர்
May 27, 2026
தமிழக மின்சாரத் துறையில் மாற்றங்கள் : நடைமுறைக்கு வரும் புதிய வசதி!

பொதுமக்களின் வசதிக்காகவும், மின்சார விநியோகத்தை சீரமைப்பதற்காகவும் தமிழக மின்சார வாரியம் பல்வேறு புதிய திட்டங்களையும், சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மின் கட்டணம் செலுத்துவதை எளிமையாக்குவது முதல் மின்வெட்டுப் புகார்களுக்கு உடனடி தீர்வு காண்பது வரை பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

அபராதத்தைத் தவிர்க்க புதிய 'ஆட்டோ பே' (Auto-Pay) வசதி

தமிழகத்தில் தற்போது சுமார் 85 சதவீத நுகர்வோர் தங்களின் மின் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்தி வருகின்றனர். இருப்பினும், ஒரு நாள் தாமதமானாலும் மின் இணைப்பு துண்டிக்கப்படுவது அல்லது அபராதம் விதிக்கப்படுவது போன்ற சிக்கல்களை நுகர்வோர் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வீட்டு உபயோகம், வணிகம் மற்றும் குறைந்த அழுத்த மின் நுகர்வோருக்காக தானியங்கி பணப் பட்டுவாடா (Auto-Pay) வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தமிழ்நாடு மின்சார வினியோக நிறுவனம் (TNPDCL), பெடரல் வங்கியுடன் இணைந்து தேசிய தானியங்கி தீர்வு மையம் (NACH) தளம் மூலமாக இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.

நுகர்வோர் தங்களது வங்கிக் கணக்கு விபரங்கள் மற்றும் உரிய அடையாள அங்கீகாரத்தை மின்வாரிய இணையதளத்தில் சமர்ப்பித்து எளிதாகப் பதிவு செய்து கொள்ளலாம்.

மின் கட்டணம் கணக்கிடப்பட்ட தேதியில் இருந்து சரியாக 10-வது நாளில், இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து மின் கட்டணத் தொகை தானாகவே எடுத்துக் கொள்ளப்பட்டு, அதற்கான மின்னணு ரசீது நுகர்வோருக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த ஆட்டோ-பே வசதியை எப்போது வேண்டுமானாலும் இணையதளம் மூலமாகவே ரத்து செய்து கொள்ளும் விருப்பமும் வழங்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாத பட்சத்தில், குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (Email) வழியாக நுகர்வோருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். இதனால் அவர்கள் மாற்று வழிகளில் கட்டணத்தைச் செலுத்த வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த அதிரடி வசதி மூலம் நுகர்வோரின் சிரமங்கள் குறைவதோடு, மின்சார வாரியத்திற்கு உரிய நேரத்தில் முறையான வருவாய் கிடைப்பதும் உறுதி செய்யப்படும்.

கோடை காலத்தில் மின் நுகர்வு அதிகரிப்பது இயல்பானது என்றாலும், கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவு நேரங்களில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இது குறித்து மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

"மின்சாரத் துறையில் நிலவி வந்த 80 சதவீதப் பற்றாக்குறைகள் மற்றும் ஓட்டைகள் முழுமையாக அடைக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள குறைகளும் விரைவில் சரி செய்யப்படும். வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற பகுதிகளில் மின்சாரப் பயன்பாடு கடுமையாக உயர்ந்துள்ளதால், அதிக மின் அழுத்தம் (Voltage overload) காரணமாகவே இந்த தற்காலிகப் மின் தடை ஏற்பட்டுள்ளது."

சென்னையில் மின்சாரக் கம்பிகள் பழுதாகும் இடங்களை உடனுக்குடன் கண்டறிந்து சரி செய்ய 7 சிறப்பு பொறியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மின்சாரத் துறையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் தவறு நடந்திருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஒரு சில இடங்களில் தனிநபர்களின் செயல்பாடுகளாலும் மின் தடை ஏற்படுவதாகத் தகவல் கிடைத்துள்ளதால் அது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து மின் தடை ஏற்படும் பகுதிகளில் புதிய துணை மின்நிலையங்கள் (Sub-stations) அமைக்கவும், நிலத்தடி மின் கம்பிகளை மேலும் வலுப்படுத்தவும், உயர்திறன் மின்மாற்றிகளை (High-capacity transformers) நிறுவவும் மின்வாரியம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்களின் மின்சாரம் தொடர்பான அனைத்துப் புகார்களையும் உடனுக்குடன் தெரிவிப்பதற்காக 24 மணி நேரமும் செயல்படும் புதிய கட்டுப்பாட்டு மைய உதவி எண்களை அமைச்சர் அறிவித்துள்ளார்.

மின் தடை அல்லது மின்வாரியம் தொடர்பான எந்தவொரு புகாராக இருந்தாலும் பொதுமக்கள் 94987 94987 என்ற எண்ணிற்கு அழைத்துத் தொடர்பு கொள்ளலாம். இது தவிர, கட்டணமில்லா இலவச உதவி எண்ணான 1912 என்ற எண்ணையும் 24 மணி நேரமும் பொதுமக்கள் பயன்படுத்திப் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.