கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 102-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் சாதனையாளர் விருது மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா இன்று (11.02.2026) நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், 2024-2025 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியரை கௌரவித்தார். சாதனை படைத்த மாணவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் தனது சொந்த நிதியிலிருந்து கல்வி ஊக்கத்தொகை மற்றும் சாதனையாளர் விருதுகளை வழங்கிப் பாராட்டினார்.

பள்ளி மாணவர்களின் உடல் நலன் மற்றும் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் விதமாக, பள்ளிக்குத் தேவையான பல்வேறு விளையாட்டு உபகரணங்களையும் அவர் வழங்கினார். மாணவர்களிடையே விளையாட்டுத் திறனை வளர்ப்பது அவசியம் என்பதை அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

இந்நிகழ்விற்கு கயத்தார் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சீதாமகேஸ்வரி, NSS திட்ட அலுவலர் பால்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜமோகன் மற்றும் ரூபன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சாலமன், காளிராஜ். ஜம்புலிங்கபுரம் திமுக கிளைச் செயலாளர் பெருமாள்சாமி. ராஜா புதுக்குடியைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும் சதீஷ்குமார் பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.