தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்  களம் கண்டுள்ள நிலையில், அக்கட்சியின் தேர்தல் சின்னமான 'விசில்' குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எள்ளி நகையாடும் வகையில் விமர்சனம் செய்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது கட்சி செயல்பாடுகள் குறித்து அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.

விஜய்யின் தவெக கட்சிக்கு 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்டதைக் குறிப்பிட்ட ஜெயக்குமார்,  "விசில் எப்போது அடிப்பார்கள்? யாராவது ஆபத்தில் இருக்கும்போதுதான் விசில் அடிப்பார்கள். நீங்கள் டைட்டானிக் படம் பார்த்திருக்கிறீர்களா? அந்தப் படத்தின் கிளைமாக்ஸில் கதாநாயகி ஆபத்தில் இருக்கும்போதுதான் விசிலை ஊதுவார். அதேபோல், தவெகவினர் தாங்கள் ஆபத்தில் இருப்பதை உணர்ந்துதான் விசில் சின்னத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்."

மேலும் "விஜய் வாங்கும் கோடிக்கணக்கான சம்பளம் கறுப்பா, வெள்ளையா? அவர் எவ்வளவு வரி செலுத்துகிறார் என்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?" என கேள்வி எழுப்பினார். மேலும், "ஆதவ் அர்ஜுனாவின் லாட்டரி பணத்தில்தான் தவெக கட்சியே நடக்கிறது" என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

தற்போதுள்ள அரசியல் சூழலில் போட்டி என்பது திமுக மற்றும் அதிமுக இடையேதான் எனத் தெரிவித்த அவர், விஜய் தன்னை ஒரு முக்கிய போட்டியாளராகக் கருதுவதை நகைச்சுவையாக விமர்சித்தார். "நடுவில் வந்து திமுகவுக்கும் எங்களுக்கும் தான் போட்டி என்று விஜய் கூறுவது, 'நானும் ரவுடிதான்' என்று வடிவேலு சொல்வதைப் போல இருக்கிறது. அவரை யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை," என்றார்.

தவெக தொடக்க விழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததாகக் குறிப்பிட்ட ஜெயக்குமார், "அங்கு விஜய் மேடையில் நடனம் ஆடிக்கொண்டிருந்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் எவ்வளவு வேதனைப்படுவார்கள் என்ற விவஸ்தை கூட அவருக்கு இல்லை," என்று கடுமையாகச் சாடினார்.