கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இது வரை 40 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தத் துயரச் சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ``தமிழக அரசியல் வரலாற்றில் இப்படியான ஒரு துயரமான, இவ்வளவு உயிர்கள் பலியான சம்பவம் இதுவே முதல் முறை.

சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பவர்களை நான் நேரில் சந்திக்கச் செல்கிறேன். விஜய் பரப்புரை நிகழ்த்திய பகுதி குறுகலான பாதையாகத்தான் தெரிகிறது.

அந்த இடம் இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு போதாது. ஏன் இப்படியான இடத்தை தேர்வு செய்தார்கள் என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது.

இவ்வளவு பெரிய மக்கள் வெள்ளத்திற்கு, காவல்துறை பாதுகாப்பும் மிக குறைவாக இருந்தது. கரூர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.

ஆம்புலன்ஸ் அந்த கூட்டத்திற்கு மத்தியில் வந்த பிறகே இவ்வளவு பிரச்சனையும் வந்திருக்கிறது. இந்த சூழலில் அரசியல் பேசுவதை விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.

கேப்டனுடன் நிறைய நிகழ்ச்சிகளுக்கு சென்றிருக்கிறேன். பெரிய பெரிய கூட்டங்களைப் பார்த்திருக்கிறேன். இது போன்ற எந்த ஒரு சம்பவமும் நடந்ததில்லை.

குழந்தைகள் பெண்கள் இளைஞர்கள் என பலதரப்பிலிருந்து மரணம் நிகழ்ந்து இருக்கிறது. எல்லோருக்கும் மன வேதனையான சூழல்" என்றார்