தூத்துக்குடி அருகே கடலில் சங்குகுளிக்க சென்ற போது படகில் மயங்கி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது கண்கள் குடும்பத்தாரின் விருப்பத்தின்பேரில் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் சிலுவை (47). நேற்று முன் தினம் கடலில் சங்குகுளிக்கும் பொருட்டு தூத்துக்குடி திரேஸ்புரத்தில் இருந்து 5 பேருடன் படகில் கடலுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, செல்லும் வழியிலேயே அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் படகில் மயங்கிவிழுந்த அவரை சக மீனவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இந்த நிலையில், அவரது கண்களை தானமாக வழங்குவதாக குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்தனர். அதன் பேரில் அவரது கண்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனை டாக்டர்கள் உடனடியாக தானம் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கடலில் சங்குகுளிக்க சென்ற போது படகில் மயங்கி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்த சம்பவம் மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்