ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளாரம் கிராமத்தின் குளத்தில் இறந்த நிலையில் ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளாரம் கிராமத்தின் வடக்கு தெருவை சேர்ந்த ராஜாமணி - முத்தம்மாள் தம்பதியினருக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் மூன்று ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.

இதில் ராஜகனி (38) என்பவர் டெய்லர் வேலை செய்து வந்துள்ளார். மேலும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் நேற்று மாலையில் சுமார் 6 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், இன்று காலையில் வெள்ளாரம் கிராமத்தில் உள்ள குளம் ஒன்றில் இறந்த நிலையில் ஆண்  சடலம்  மிதந்துள்ளது. இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு  ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குளத்தில் இறந்த நிலையில் இருந்த உடலை பொதுமக்கள் உதவியுடன்  மீட்டு பார்த்தபோது, அது நேற்று மாலை வீட்டை விட்டு போன ராஜகனி என தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ராஜகனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .