தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கலாம் என்ற அஜெண்டாவை கையில் எடுத்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

இதற்கு காரணம் ஆளுங்கட்சியான திமுகவையும், அசுர பலத்துடன் திகழும் அமைச்சர்களையும், இன்னொரு பக்கம் பாஜகவையும் களத்தில் எதிர்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு இது தான் வழி எனக் எடப்பாடி பழனிசாமி கருதுகிறாராம்.

இதற்காக தொகுதிவாரியாக யாரை வேட்பாளராக களமிறக்கலாம் என்ற தேடுதல் வேட்டையில் எடப்பாடி பழனிசாமியே நேரடியாக ஈடுபடத் தொடங்கியுள்ளார். மாவட்டச் செயலாளர்கள் கொடுத்த மூன்று பேர் அடங்கிய பட்டியல் ஒரு பக்கம் இருந்தாலும் திமுக வேட்பாளர்களையும், அமைச்சர்களையும் வீரியமாக எதிர்த்து களமாடக்கூடியவர்கள் யார் யார் என்ற டேட்டாவை தனிப்பட்ட முறையில் தனது சோர்ஸ்கள் மூலம் திரட்ட ஆரம்பித்துள்ளார்.

இதன் மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தல் செலவுக்கு கட்சியை பெரியளவில் நம்ப வேண்டாம் என்பது எடப்பாடி பழனிசாமி உணர்த்தும் மெசேஜாக உள்ளது. 40க்கு 40 தொகுதிகளையும் வெல்வோம் என அவர் பேசி வந்தாலும் குறைந்தது 10 முதல் 12 தொகுதிகளில் வென்றாலே போதும் என்ற டார்க்கெட்டுடன் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் தீவிர கவனம் செலுத்துமாறு கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.

இதனிடையே பொங்கல் பண்டிகை முடிந்த ஒரு வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி பைனல் செய்துவிடுவார் என்கிறார் அக்கட்சியை சேர்ந்த மாநில அளவிலான முக்கிய நிர்வாகி ஒருவர். ஜெயலலிதா காலம் தொட்டே தேர்தல் என்று வந்துவிட்டாலே அதிமுக தான் முதல் ஆளாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும். அதேபோல் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் வகையில் முன் கூட்டியே வேட்பாளர் தேர்வு படலத்தில் கவனம் செலுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் 5 முதல் 6 சட்டமன்ற தொகுதிகள் வருவதாலும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்க வேண்டும் என்பதாலும் அதற்கேற்ப படித்த, பசையுள்ள, பயணம் செய்ய திடகாத்திரமுள்ள நபர்களை எடப்பாடி டிக் அடித்து வருகிறார்.