இந்த வருடம் தீபாவளி பண்டிகையில் கார்த்தியின் ஜப்பான், லாரன்சின் ஜிகர்தண்டா 2 , விக்ரம் பிரபுவின் ரெய்டு ஆகிய 3 படங்கள் தீபாவளிக்கு மோத தயாராகி உள்ளது.

இந்த வருடம் தீபாவளி பண்டிகையில் கார்த்தியின் ஜப்பான், லாரன்சின் ஜிகர்தண்டா 2 ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவித்து இருந்தனர். தற்போது விக்ரம் பிரபுவின் ரெய்டு படமும் போட்டியில் இணைகிறது. இதன் மூலம் தீபாவளிக்கு 3 படங்கள் மோத தயாராகி உள்ளது.

ஜப்பான் படத்தை ராஜுமுருகன் இயக்கி உள்ளார். இவர் தேசிய விருது பெற்ற ஜோக்கர் படத்தை இயக்கி பிரபலமானவர். இது கார்த்திக்கு 25-வது படம் ஆகும். நாயகியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார்.

சித்தார்த் நடித்த ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமாக ஜிகர்தண்டா 2 உருவாகி உள்ளது. இதில் லாரன்சுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இந்தப்படம் அதிரடி சண்டை படமாக உருவாகி உள்ளது.

விக்ரம் பிரபுவின் 'ரெய்டு' படம் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் உருவான 'தகறு' என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகி உள்ளது. இந்தப்படத்தில் ஸ்ரீதிவ்யா, அனந்திகா, ரிஷி ரித்விக், சவுந்தர்ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்தி இயக்கி உள்ளார்.

ஏற்கனவே தீபாவளிக்கு வெளியாக இருந்த சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை பொங்கல் பண்டிகைக்கு தள்ளி வைத்து விட்டனர். இதுபோல் தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்த்த விக்ரமின் துருவ நட்சத்திரம் படம் நவம்பர் இறுதிக்கு போகிறது.