<p><b>தூத்துக்குடி மாவட்டத்தில் 524 பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.</b></p><p>முதல்வரின் காலை உணவுத் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி.&nbsp; இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருக்குவளையில் இன்று காலை தொடங்கி வைத்தார்.&nbsp; அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார்.</p><p>இப்பள்ளியில் காலை உணவாக கிச்சடி, கேசரி வழங்கப்பட்டது. மாணவர்-மாணவிகளுக்கு உணவை பரிமாறிய எம்பி கனிமொழி, தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.&nbsp; இந்த பள்ளியில் மொத்தம் 125 மாணவர்- மாணவியர் பயனடைந்தனர். மாவட்டம் முழுவதும் 524 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் மொத்தம் 18 ஆயிரத்து 819 மாணவ - மாணவியர் பயனடைந்தனர்.</p><p>தொடக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா,&nbsp; சார் ஆட்சியர் கௌரவ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.</p>