தூத்துக்குடியில் 2¼ வயது பெண் குழந்தை சுவரில் அடித்துக் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பாக தாயின் 2-வது கணவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி மேற்கு காமராஜர் நகரை சேர்ந்தவர் டேவிட் (வயது 32). வெல்டர். இவருடைய மனைவி ஸ்டெபி (28). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, 5 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2¼ வயதில் கேத்தரின் என்ற பெண் குழந்தையும் இருந்தனர்.

இந்த நிலையில் ஸ்டெபி முதல் கணவரை பிரிந்து விட்டதால், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு டேவிட்டை 2-வதாக திருமணம் செய்து உள்ளார். டேவிட்டுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று  இரவு டேவிட் வீட்டுக்கு வந்தார். அப்போதும் ஸ்டெபியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரிடம் தகராறில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது.

இதில் ஆத்திரம் அடைந்த டேவிட், மனைவி ஸ்டெபியை சரமாரியாக தாக்கினார். மேலும் தொட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்த குழந்தை கேத்தரினை தொட்டிலுடன் சேர்த்து சுவரில் அடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.

அதனைத்தொடர்ந்து இன்று  காலையில் ஸ்டெபி தொட்டிலில் கிடந்த குழந்தையை பார்த்தார். அப்போது குழந்தை மயங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை கேத்தரின் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாளமுத்துநகர் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து டேவிட்டை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பச்சிளம் குழந்தை சுவரில் அடித்துக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.