தூத்துக்குடியில் இன்று அதிகாலையில் தி.மு.க. வட்ட செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் மனோகரன். தி.மு.க. முன்னாள் கவுன்சிலர். இவரது மகன் நடராஜன் (வயது 35) 45-வது வட்ட தி.மு.க. செயலாளராக உள்ளார். இவர் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனமும் நடத்தி வந்தார்.

சண்முகபுரத்தில் உள்ள  கோவில் கொடைவிழா நேற்று இரவு நடைபெற்றது. அப்போது சில வாலிபர்கள் சமூகஇடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நின்றதாகவும், அதில் ஒருவர் போதையில் நடனம் ஆடியதாகவும் கூறப்படுகிறது.

இதைப்பார்த்த நடராஜன் அவர்களை கண்டித்துள்ளார். இதில் நடராஜனுக்கும், அதே பகுதியை சேர்ந்த தங்க கார்த்திக் (21) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பெரியவர்கள் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் கொடை விழா முடிந்து இன்று அதிகாலை கோவிலில் இருந்து புறப்பட்ட நடராஜன் ராமசாமிபுரத்தில் உள்ள தனது ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த தங்க கார்த்திக், எப்படி என்னை கண்டிக்கலாம் என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து தகராறு முற்றவே ஆத்திரமடைந்த தங்க கார்த்திக், அவரது நண்பர்களான அருண்குமார் உள்ளிட்டோர் அடங்கிய கும்பல் அரிவாளால் சரமாரியாக நடராஜனை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

பின்னர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நடராஜனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலை குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் கணேசன், தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர். அதில் 4 பேர் கொண்ட கும்பல் நடராஜனை வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து தங்ககார்த்திக், அருண்குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட தங்க கார்த்திக் மீது தென்பாகம் போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.