முறப்பநாடு அருகே இரவில் லாரி டிரைவர் வழிமறித்து வெட்டி படுகொலை செய்ய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே கீழபுத்தனேரியை சேர்ந்தவர் சுடலைமுத்து மகன் மாரியப்பன். லாரி டிரைவரான இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த பண்டாரம் மகன் மாரியப்பன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் பண்டாரம் மகன் மாரியப்பன் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக சுடலைமுத்து மகன் மாரியப்பன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தற்போது அவர் ஜாமினில் வெளிவந்த நிலையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்றிரவு மாரியப்பன் வசவப்புரத்தில் இருந்து கீழபுத்தனேரி செல்லும் சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது மறைந்திருந்த ஐந்துக்கும் மேற்பட்ட கும்பல் திடீரென அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே மாரியப்பன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் முறப்பநாடு காவல் ஆய்வாளர் பாஸ்கர் தலைமையிலான காவலர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

2012 ஆம் ஆண்டு கொலையான மாரியப்பனின் மகன் மற்றும் உறவினர்கள் பழிக்குப்பழியாக இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இக்கொலை சம்பவத்தால் வசவப்புரம், முறப்பநாடு, கீழ புத்தனேரி பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது